தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த முத்துராமன் முத்துமாரி தம்பதியருக்கு யுவராணி, நித்யா என இரு மகள்கள் உள்ளனர். யுவராணி கல்லூரியிலும், நித்யா பிளஸ் 2வும் பயின்று வருகின்றனர். தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முத்துராமன் 10 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டாராம். அதனால் கூலி வேலை செய்து முத்துமாரி தன் மகள்களைப் பராமரித்து வந்திருக்கிறார்.
இந்தச் சூழலில் நேற்று முத்துமாரியின் வீட்டு காம்பவுண்ட் வெளியே பூட்டப்பட்டிருந்தது. ஆள் நடமாட்டம் தெரியவில்லையாம். அதே சமயம் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை உணர்ந்த அண்டை வீட்டார் போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். எஸ்.பி. ஜெயக்குமார், டி.எஸ்.பி. உதயசூரியன் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் கேட் கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் உள்பக்கம் பூட்டப்பட்ட கதவை உடைத்து உள்ளே சென்றபோது, முத்துமாரி ஒரு அறையிலும், யுவராணி நித்யா மற்றொரு அறையிலும் சேலையில் தூக்கில் பிணமாகத் தொங்கியது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் இறந்து 2 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்று தெரிகிறது.
மூன்று பேரின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்ட எஸ்.பி. ஜெயகுமார் சம்பவ இடத்தை ஆய்வு செய்திருக்கிறார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரனையின்போது 3வரின் தற்கொலைக்கு காரணம் சொத்துப் பிரச்சனை எனத் தெரியவந்திருக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன் காலமான முத்துமாரியின் தந்தை தேவராஜ் தன் வீட்டை முத்துமாரிக்கு உயில் எழுதி வைத்திருக்கிறாராம். ஆனால் அந்த வீட்டில் அவரது சகோதரர் ஆண்டவர் வசித்து வருகிறாராம். இருவருக்குமிடையே வீடு தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டு காவல்நிலையம் வரை போய், அங்கே போலீசார் அவர்களை உயில்படி நடந்துகொள்ளுங்கள் என்று இருவரிடமும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இருப்பினும் அக்கா, தம்பி இடையே சொத்துப்பிரச்சனைத் தொடர்ந்திருக்கிறது. இந்த நிலையில் முத்துமாரி, யுவராணி, நித்யா மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகத் தெரிகிறது.
வீட்டை உட்புறமாகப் பூட்டியவர்கள் முதலில் யுவராணியும் நித்யாவும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் இறந்ததை உறுதி செய்த தாய் முத்துமாரி மற்றொரு அறையில் தற்கொலை செய்தது தெரியவந்தது என்கிறார்கள் விசாரணை போலீசார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மேற்கு காவல்நிலைய போலீசார், தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டது கோவில்பட்டி நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.