Skip to main content

வனத்துறை அலுவலர்களால்  தேடப்பட்டு வந்த  தலைமறைவு குற்றவாளி கைது

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

 

யானையைக்கொன்ற வழக்கில் வனத்துறை அலுவலர்களால்  தேடப்பட்டு வந்த  தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

 

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பெரியதடாகம் பகுதியில் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடியை வைத்து அதனை கடித்ததால் குட்டி யானை ஒன்று இறக்க நேரிட்ட சம்பவம் கடந்த 29.7.2016 அன்று நடைபெற்றது.

 

k

 

இச்சம்பவம் தொடர்பாக கோவை வனச்சரகத்தில் WLOR No.3/2016 வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்திற்கு  காரணமான எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.  எனினும் இவ்வழக்கில் தொடர்புடைய  குற்றவாளியான சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த செங்கா (எ) ராஜேந்திரன் என்பவர் மட்டும் தப்பியோடி விட்டார். 

 

இது தொடர்பாக 9.8.2016 அன்று தனிக்குழு அமைக்கப்பட்டு எதிரியை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டது. இத்தனிக்குழுவினரால் மேற்படி எதிரி பிடிக்கப்பட்டபோதும் எதிர்பாராத விதமாக அப்போதும் தப்பியோடி விட்டார்.

 

இந்நிலையில் இன்று (17.5.2019) காலை சுமார் 8.40 மணியளவில் கோவை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் தடாகம் பிரிவு வனவர் சாரம்மாள், வனக்காப்பாளர் ரங்கசாமி மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் அடங்கிய குழுவினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வீரபாண்டி பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் மேற்படி யானைக்குட்டியை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த செங்கா (எ) ராஜேந்திரன் என்பது உறுதி செய்யப்பட்டது.

 

மேற்படி நபர் வன அலுவலர்களால் கைது செய்யப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.     கைதான நபரை கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுரைப்படி கனம் நடுவர் , குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.I முன் நேர் நிறுத்தி  நீதிமன்ற காவலில் சிறைப்படுத்த  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

சார்ந்த செய்திகள்