Skip to main content

இந்த கடைய திறந்து வச்சதுனாலதான் ஒரு செகண்டுல என் மனைவியை பறிகொடுத்துட்டு நிக்கறேன்!!! டாஸ்மாக்கால் நிகழ்ந்த விபரீதம்

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

கோவை, ஆனைக்கட்டி தமிழக - கேரளா எல்லையில் இருக்கிறது. அங்கே உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அங்குள்ள மக்கள் பல நாள்கள் போராடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த டாஸ்மாக் கடையை மூடினர். பின்பு அரசியல் தலையீட்டால் மீண்டும் அமோகமாய் திறக்கப்பட்டது அந்த டாஸ்மாக் கடை.
 

kovai


அந்த டாஸ்மாக் கடைதான் ஓர் உயிரைப் பறித்திருக்கிறது. கடந்த திங்கள் அன்று மாலை ஜம்புப்பட்டியைச் சேர்ந்த ரமேஷின் மனைவி ஷோபனா ஸ்கூல் முடிந்து வரும் தனது மகளை கூட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது   அந்த டாஸ்மாக் கடையில் இருந்து மது அருந்திவிட்டு படு போதையில் டூ வீலரில் வேகமாய் வந்த இரு இளைஞர்கள், ஷோபனாவின் டூ வீலரில் மோத ஷோபனாவும், அந்த சிறுமியும் தூக்கி வீசப்பட்டனர்.

தூக்கி வீசப்பட்ட ஷோபனா அந்த இடத்திலேயே பரிதாபமாய் இறந்து போனார். விபத்து ஏற்படுத்திய போதை இளைஞர்களும் பலத்த காயத்தோடு கிடந்தனர். அந்த போதை இளைஞர்களையும், படுகாயங்களோடு துடித்த ஷோபனாவின் சிறுமியையும், மருத்துவமனைக்கு பொதுமக்கள் உதவியோடு கொண்டு செல்லப்பட்டிருக்க, விபத்தை அறிந்த ஷோபனாவின் கணவர் ரமேஷ் ஸ்பாட்டுக்கு வந்தார். வந்தவர் தன் மனைவியின் உடலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு கதறி அழுதார். அவரின் உறவினர்களும் சாலையில் அமர்ந்து கொள்ள ரமேஷ் கண்ணீர் மல்க ஊடகங்களிடையே இவ்வாறு பேசினார். 

இந்த டாஸ்மாக் கடை முதலில் இருக்கும்போது நிறைய விபத்துகள் ஏற்படுதுன்னு மக்கள் தொடர்ந்து போராட்டம் பண்ணி கடையை மூடுனாங்க. இந்த கடையை எடுத்த  பின்னாடி இங்கே விபத்துகள் ரொம்பவும் குறைஞ்சு இருந்துச்சு. ஏன்னா இந்த கடையை விட்டுட்டா மன்னார்காடு வரைக்கும் ஒரு டாஸ்மாக் கூட கெடையாது. அதனாலதான் விபத்துகள் ஏற்படாம இருந்துச்சு. இப்ப இந்த ஆளுங்கட்சிக்காரங்க மறுபடியும் கடையைத் திறந்து வச்சதுனாலதான் திரும்பவும் இங்கே குடிகாரர்கள் குவிய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த கடைய திறந்து வச்சதுனாலதான் ஒரு செகண்டுல என் மனைவியை பறிகொடுத்துட்டு நிக்கறேன். 
 

 

kovai



இந்த கடையை மூடாம என் மனைவியோட உடலை இங்கிருந்து எடுத்துட்டு போக விடமாட்டோம். என கிட்டதட்ட 5 மணி நேரம் ரமேஷ் அமர்ந்து கொண்டதால் தமிழக - கேரளா சாலையில் போக்குவரத்து தடைபட்டது. சாலை மறியலை கைவிடச் சொல்லிய போலிஸிடமும், வட்டாட்சி அலுவலரிடமும் கடையை திறந்து வச்சு ஒரு  செகண்டுல உயிர் போயிருச்சு. அந்த ஒரு செகண்டுல உயிரை எடுத்த அந்த டாஸ்மாக் கடையை எடுக்க முடியாதா? என அவர் கேட்ட கேள்வி, அரசாங்கத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தது போல இருந்தது.

கண்டிப்பாய் கடையை மூடுவோம் என உறுதியளித்த பின்னரே ரமேஷ் தன மனைவியின் உடலை தூக்கிக் கொண்டு போக இசைவு தெரிவித்தார். மதுவால் உயிரைப் பறித்த  இளைஞர்களும், அந்த மதுக்கடையும் கோவையின் மனதில் தீப்பிழம்பாய் எரிந்து கொண்டிருக்கிறார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்