
சென்னை தி.நகரில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது அமைச்சர் கே.என்.நேரு, தான் அணிந்திருந்த வெள்ளியிலான கருங்காலி மாலையைக் கழற்றி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அணிவித்தார். அப்போது கே.என்.நேரு “உங்களுக்குத்தான் அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது. இந்த மாலையைப் போட்டுக்கங்க..” எனக் கூறியிருக்கிறார்.
‘தீய சக்திகள் விலகும்; ஆன்மிக பலம் பெருகும்; செல்வம் குவியும்.’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் கருங்காலி மாலைகளை, சினிமா பிரபலங்களும், அவர்களைப் பின்பற்றி ரசிகர்களும் அணிந்து வருகிறார்கள். கருங்காலி மாலை ஜுரம் அரசியல் தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. அமைச்சர் கே.என்.நேரு வெள்ளியிலான கருங்காலி மாலையை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அணிவித்த போட்டோக்கள், வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.