
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (03.03.2025) நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “ ஒவ்வொரு விவகாரத்திலும், நாம் நம்முடைய உரிமையை நிலைநாட்ட போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அனைத்துத் திட்டங்களிலும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி முறையாக வருவதில்லை. இயற்கை பேரிடர் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய கூட, நிவாரண நிதியை முழுமையாக தருவது கிடையாது. ஏன், இப்போது பள்ளி மாணவ மாணவியர் படிப்புக்காக தர வேண்டிய நிதியைக் கூட தருவதில்லை.
இந்த நிதியை தரவேண்டும் என்றால், என்ன சொல்கிறார்கள் மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நமக்கு நிபந்தனை போடுகிறார்கள். இந்த ஒன்றிய அரசு ஏன் செய்தது தெரியுமா?. தமிழ்நாடு இந்தளவுக்கு முன்னேறியிருப்பதற்கு காரணம் இருமொழிக் கொள்கைதான் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒன்றிய அரசின் அனைத்து புள்ளி விவரங்களிலும், முன்னணியில் இருக்கிறோமே. அது தெரியாதா அவர்களுக்கு?. நன்றாக தெரியும். தெரிந்தும் ஏன் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி தமிழின் தனித்துவம் சிலருடைய கண்களை உறுத்துகிறது. அதனால் இப்படி செய்கிறார்கள். உலகம் முழுவதும் நம்முடைய தமிழர்கள் பெரிய பெரிய கம்பெனிகளில், பெரிய பெரிய வேலைகளில் இருக்கிறார்கள். அதற்கு காரணம், ஆங்கிலம் கற்றுக்கொண்டது. அந்த இடத்தில், இந்தியை கற்றுக் கொண்டிருந்தால், நம்மால் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா? முடியவே முடியாது.
நம்முடைய தாய்மொழி தமிழ். உலகத்துடன் பேச ஆங்கிலம். வாழ்க்கையில் முன்னேற அறிவியல் தொழில்நுட்பம் கணிதம் சமூக அறிவியல் போன்ற படிப்புகள். இதுதான் நம்முடைய வெற்றியின் அடிப்படை. நான் இன்னும் வெளிப்படையாகவே சொல்கிறேன். இந்தி ஆதிக்கம் எதற்கு என்றால், சிலருடைய சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதுதான். இதை உணர்ந்த காரணத்தால்தான் இந்தித் திணிப்புக்கு எதிரான நம்முடைய உரிமைக்குரலுக்கு இப்போது, வட மாநிலங்களில் இருந்தும் ஆதரவுக் குரல்கள் வருகிறது. இந்த சதியை பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாடு உணர்ந்துவிட்டது. அந்தச் சதியின் தொடர்ச்சியாகதான், இப்போது நடக்கின்ற மிரட்டல்கள் என்று இளைய தலைமுறையினரும் ஏன், தமிழ்நாட்டுக் குழந்தைகள்கூட உணர்ந்திருக்கிறார்கள்” எனப் பேசினார்.