
அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. இதனிடையே ராமஜெயத்தின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரன் இந்த கொலை வழக்கு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், ‘இந்த வழக்கை சிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. கண்காணிப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் சிறப்புப் புலனாய்வுக் குழு தொடர்ந்து விசாரித்து வந்தது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு சார்பில் இடைக்கால அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இன்று (03.03.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, “இந்த வழக்கில் பல்வேறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. விசாரணை அதிகாரியாகவும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். இருப்பினும் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தொய்வின்றி நடைபெற்றது. தற்போது ஜெயக்குமார் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதால் புலன் விசாரணை பாதித்துள்ளது.
எனவே திருச்சி அல்லது அருகில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளைப் புலன் விசாரணைக் குழுவில் இடம் பெற்றால் இந்த வழக்கின் விசாரணையின் முன்னேற்றம் இருக்கும்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “கடலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாருக்குப் பதிலாகத் திருச்சி சரக டி.ஐ.ஜி. மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் கூடுதலாகச் சேர்த்து விசாரணை செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.