Skip to main content

மேட்டுப்பாளையமா?  கஞ்சாப் பாளையமா? தொடர்ந்து கிலோ கணக்கில் சிக்கும் கஞ்சா..! 

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

Kilo's of cannabis caught by coimbatore police
                                                     மாதிரி படம் 

 

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்வதில் இரு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருவர் வெட்டப்பட்டு படுகாயமடைந்தனர்.

 

இதனையடுத்து கோவை எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த கும்பல்கள் தொடர்ந்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, மேட்டுப்பாளையத்தில் 15.200 கிலோ கஞ்சாவினைப் பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். அதேபோல் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மேட்டுப்பாளையத்தில் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனை கும்பல்களைப் பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஊமப்பாளையம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செல்வநாயகம் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்போது, அவ்வழியே வந்த ஊமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் (45), சண்முகம் (36) மற்றும் வேடர் காலனியைச் சேர்ந்த நாகார்ஜூன் (20) உள்ளிட்டோரை சோதனை செய்தனர். அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரித்தபோது விற்பனைக்காக கொண்டுவந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைதுசெய்து, அவர்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவினைப் பறிமுதல் செய்தனர். மேலும், எஸ்.எம்.நகர் பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் கஞ்சா விற்பனை செய்த மன்சூர் (30) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 700 கிராம் கஞ்சாவினையும் பறிமுதல் செய்தனர்.

 

தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்யும் மேட்டுப்பாளையம் போலீசார், அவர்களிடமிருந்து கஞ்சாவினையும் பறிமுதல் செய்துவரும் சம்பவங்களால் மேட்டுப்பாளையம் கஞ்சாப் பாளையமாக மாறி நிற்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.