உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலையின்மை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனை. எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதம் இருந்ததில்லை.
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது, உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. அதாவது வேலையின்மை 42% ஆக உள்ளது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமானகரமான நிகழ்வு இதுவாகும்.
பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020, இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா, கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம்.
இந்த ஐந்து சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பின்னர் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். அப்போது 25 சட்டங்கள் திருத்தப்பட்டு அரசியலமைப்புக்கு இணையாக கொண்டு வரப்படும். எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.