Skip to main content

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
All party meeting in Karnataka

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதை கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அன்றைய தினமே கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று (14.07.2024) அனைத்து கட்சி கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மாநில துணை முதலமைச்சரும், நீர் பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், பாஜக மாநில தலைவர் சி.டி.ரவி, நீர்பாசனத்துறை துறை அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

“தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான போக்கைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும்.” - தொல்.திருமாவளவன்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Thirumavalavan said Karnataka govt should stop its trend against Tamil Nadu people

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கர்நாடக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கடண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையின்படி ஜூலை 31ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் எனக் கர்நாடக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தினம் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டது. ஆனால் ‘காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் போதுமான மழை பெய்யவில்லையென்றும்;  28% அளவில் குறைவாக மழை பெய்து இருக்கிறதென்றும்; அதனால் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறியுள்ள கர்நாடக அரசு,  காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் மேல் முறையீடு செய்யப்போகிறோம்’ என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஜூலை 14ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. 

கர்நாடகாவில் உள்ள ஹாரங்கி அணையில் 73% தண்ணீரும் ,ஹேமாவதி அணையில் 55 % தண்ணீரும் , கிருஷ்ணராஜ சாகர் அணையில் 54 %  தண்ணீரும் , கபினியில் 96 சதவீதம் தண்ணீரும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கட்டின் முழு கொள்ளளவுக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அவ்வாறு இருந்தும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது எனக் கர்நாடகா அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இந்தப் போக்கைத் கர்நாடக அரசு கைவிட வேண்டும்.

காவிரிப் பிரச்சினையை பொருத்தமட்டில் கர்நாடகாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் ஒரே நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலோ இதிலும் அரசியல் தான் செய்யப்படுகிறது. இந்த நிலையை மாற்றி கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் காவேரிப் பிரச்சனையில் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். 

“கர்நாடக அரசு போலவே தமிழ்நாடு அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகளடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.