Skip to main content

சமூக மாற்றத்திற்கான திறவுகோல் நூலகங்களில் உள்ளது - கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு

Published on 05/05/2018 | Edited on 05/05/2018
marx

 

 உலகில் நடந்துள்ள பல்வேறு சமூக மாற்றங்களுக்கான திறவுகோலாக நூலகங்கள் இருந்துள்ளது என்றார் கவிஞர் நா.முத்துநிலவன். 

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காட்டாத்தியில் இளைஞர்களின் முயற்சியால் ‘கூடு’ என்ற பெயரில் அமைக்கப்பட்ட பொது நூலகத்தை வியாழக்கிழமையன்று திறந்துவைத்து அவர் மேலும் பேசியது:

’’மாணர்வர்களுக்கு வழிகாட்டியாகவும், படிக்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு வாழ்க்கையின் திசைகாட்டியாகவும் திகழ்வது நூலகங்கள். இரண்டாயிரம் ஆண்டுகால சிந்தனைப் போக்குகளை மாற்றிப்போட்ட காரல் கார்க்ஸ், இந்திய அரசியல் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், தேசத் தந்தை காந்தியடிகள், முதல் பிரதமர் நேரு போன்ற தலைவர்களெல்லாம் நூல்களின் மூலமாகவே சிந்தனை வளம்பெற்றனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட ஏராளமான எழுத்தாளர்களும், கவிஞர்களும் நூலகப் பள்ளியிலேயே நுண்ணிய அறிவைப் பெற்றனர்.

 

தொலைக்காட்சி ஊடகம் படிப்பவர்களையெல்லாம் வெறும் பார்வையளர்களாக மாற்றிவிட்டது. வாசித்து, வாசித்து வசப்பட்ட சிந்தனையே புதிய படைப்புகளுக்கு வழிவகுக்கும். இளைஞர்களின், சுய முன்னேற்றத்திற்கும், சமூகப் பார்வைக்கும் நூலகங்களே உதவும். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள இடையாத்தி வடக்கு கிராமத்து இளைஞர்கள், பொதுமக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இனி உங்களின் நேரத்தை வீணாக்காமல் இந்தக் கூட்டில் வந்தமர்ந்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.      

 

விழாவுக்கு ரெ.பெ.கருப்பையா தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெ.துரைராஜ், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சரோஜா, ரோட்டரி சங்கத் தலைவர் ஞானசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் சு.மதியழகன் எம்.ஸ்டாலின் சரவணன், துரை.அரிபாஸ்கர், சாமி கிரீஷ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், எழுத்தாளர் அண்டனூர் சுரா அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் சி.புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்;.  
 
 
 

சார்ந்த செய்திகள்