கனடாவுக்கும், இந்தியாவுக்கும் கடந்த சில காலங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா நாட்டு குடிமகனாக இருந்த நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
அவரது குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும், கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது.
இந்த நிலையில், பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜார் கொலை சம்பவம் தொடர்பாக மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கொலை வழக்கின் கீழ் கைதான அவர்களின் புகைப்படங்களையும் கனடா போலீசார் வெளியிட்டுள்ளனர். கைதானவர்கள், கரண் ப்ரார் (22), கமல்ப்ரீத் (22) மற்றும் கரண்ப்ரீத் சிங் (28) ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “நிஜார் கொலை, நாட்டில் பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டது. அதைக் கடந்து செல்ல முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது” என்று கூறினார். இதனையடுத்து, கனடா போலீசாரின் இந்த கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “கனடா எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. சில வழக்குகளில் அவர்கள் எங்களிடம் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்து கொள்வதில்லை. போலீஸ் ஏஜென்சிகளும் எங்களுக்கு ஒத்துழைப்பதில்லை. இந்தியாவைக் குறை கூறுவது அவர்களது அரசியல் நிர்ப்பந்தம். கனடாவில் தேர்தல் வருவதால் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறார்கள்.
கைது செய்யப்பட்ட நபர்கள் ஏதோ ஒரு கும்பல் பின்னணியில் இருக்கும் இந்தியர்கள் என்று தெரிகிறது. காவல்துறை சொல்லும் வரை நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், நான் ஏற்கனவே சொன்னது போல், எங்களுக்கு வருத்தமளிக்கிறது. அவர்கள் இந்தியாவில் இருந்து, குறிப்பாக பஞ்சாபிலிருந்து, கனடாவில் திட்டமிட்ட குற்றங்களை செயல்பட அனுமதித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.