இந்திய கடல்சார் தகவல் மையம் நேற்று முன்தினம் (04.05.2024) பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. அதில், “காற்றின் போக்கு காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும். கல்லக்கடல் எனும் நிகழ்வு 4 மற்றும் 5 ஆம் தேதி (05.04.2024) ஏற்படும். கடல் அலை சீற்றத்துடன் இருக்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட கடலோர பகுதிகளில் சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 5 ஆம் தேதி (05.04.2024) இரவு வரை தென் தமிழக மாவட்டங்களில் 0.5 மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை எழும்புவதற்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு இன்றும் நீட்டிக்கப்பட்டது.
இதனையொட்டி கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் உள்ள கடலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடலில் இருந்து எழும் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனையொட்டி கடலில் யாரும் குளிக்கக் கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த மாணவர்கள் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் அருகே கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கடலில் குளித்தபோது 6 பேரை அலை இழுத்துச் சென்றது. இதில் 5 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் சம்பந்தப்பட்ட கடற்கரையில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து கிராம ஊராட்சி ஊழியர்கள், காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் எச்சரிக்கை தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கவும் எஸ்.பி. சுந்தரவதனம் அறிவுறுத்தியுள்ளார். கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கடல் தகவல் சேவைகளுக்கான தேசிய மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் இயல்பை விட 1.5 மீ அளவு அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.