ஒடிசா மாநிலத்தில் தால்சர், ஐ.பி.வேலி உள்பட சில நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், தால்சர், ஐ.பி.வேலி சுரங்கங்களில் இருந்து தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, 5,120 மெகாவாட் திறனில் 6 அனல் மின் நிலையங்களுக்கு இந்த நிலக்கரி சுரங்கங்களில் இருந்து தான் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய, இந்த ஆண்டிற்கான ஏலத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் கலந்துகொண்டுள்ளது. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் 21 கோடி டன் நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் சுரங்கத்தை பெறுவதற்கான ஏலத்தில் தமிழ்நாடு மின்வாரியம் கலந்துகொண்டது.
ஆனால், இந்த ஏலத்தில் தமிழ்நாடு தவிர எந்த மாநில நிறுவனங்களும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த சுரங்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒதுக்கப்பட இருக்கிறது.
ஏலத்தை பொறுத்தவரை, சுரங்கத்துக்கு முதல் முறை ஏலம் விடும்போது ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்றால், அந்நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படாது. மாறாக, இரண்டாவது முறையாக ஏலம்விடும் போதும், அதே நிறுவனம் மட்டும் பங்கேற்றால் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி, சகிகோபால் சுரங்க ஏலத்தில் முதல் முறை மட்டுமல்லாமல் இரண்டாவது முறை ஏலத்தில் தமிழ்நாடு மட்டுமே பங்கேற்றுள்ளது. அதனால், அந்த சுரங்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைப்பதற்காக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.