Skip to main content

“தேர்தல் ஆணையம் பிரதமரிடம் விளக்கம் கேட்க பயப்படுகிறது” - தொல்.திருமாவளவன்!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
Election Commission is afraid to ask the PM modi for an explanation says Thirumavalavan

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான   தொல்.திருமாவளவன் மீண்டும்  போட்டியிட்டார்.  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த  தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, “சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு எந்திரம் அரியலூரில் வைக்கப்பட்டுள்ளது அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இது குறித்து  விசிக வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சிசிடிவி கேமரா செயல் இழந்துள்ளது. சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில்  பாதுகாக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதனை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சிசிடிவி இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பிரதமர் மோடி அண்மை நாட்களாக  பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அதை அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். அதற்கான சான்றுகள் அவரது பேச்சில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடும் வகையாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசிய விவகாரத்தில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி பிரதமருக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம் அதற்கு மாறாக நட்டாவுக்கு  அவர்களுக்கு அனுப்பியது ஏன் என்று புரியவில்லை.

தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சார்பாக இருக்கிறது. ஆளும் கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமரை விளக்கம் கேட்பதற்கு  கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் 5 கட்ட தேர்தலில் தேர்தல் கமிஷன் சரியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். வருகிற 9 ந் தேதி ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். இதே போல் மகாராஷ்டிராவில் தாராவில் போட்டியிடுகின்ற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஜூன் 1ந் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலைக் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார். தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள்  7 தொகுதியில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.  இது வரையில்  அரசியல் வரலாற்றிலேயே அமலாக்கத்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் முதல்முறையாக அதுவும் ஒரு முதலமைச்சரை பொறுப்பில் இருப்பதை கெஜ்ரிவால் அவர்களை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

அதேபோல ஹேமன்சோரன் அவர்களும் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது  ஒரு தவறான முன் மாதிரி என்று  அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.  இந்த கைதுகள்  இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும். இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கட்டிலுக்கு அடியில் பதுங்கிய ரவுடிகள்; அடைக்கலம் தந்த விசிக பிரமுகர் உட்பட 6 பேர் கைது

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Rowdies lurking under the bed; 5 people arrested, including a official of vck


கும்பகோணத்தைச் சேர்ந்த விசிக கவுன்சிலர் வீட்டின் கட்டிலுக்கு அடியில் ரவுடிகள் பதுங்கி இருந்த சம்பவமும், கொடுமையான ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசிக பிரமுகரும் கைது செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே உள்ளது பாத்திமாபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் விசிக பிரமுகரான அலெக்ஸ். இவருடைய மனைவி கும்பகோணம் மாமன்ற கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் சந்தேகப்படும் வகையில் சில நபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசிக கவுன்சிலரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனைக்கு அலெக்ஸ் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். 'இங்கு யாரும் பதுங்கி இருக்க வில்லை' என ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் போலீசார் தரப்பு தாங்கள் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று வந்திருப்பதாகக் கூறி வீட்டின் ஒவ்வொரு அறைகளையும் சோதனையிட்டனர். அப்போது வீட்டின் பிரதான படுக்கையறையின் கட்டிலுக்கு அடியில் சிலர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. கிங் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி, பாலுசாமி, அருண்குமார், அஜய் என்கிற நான்கு பேரையும் கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வர செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மொத்தம் 22 கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. குற்றச்செயலில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசிக பிரமுகர் அலெக்ஸையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசிக பிரமுகரின் வழக்கறிஞர்கள் தரப்பு கூறுகையில், 'பாத்திமாபுரத்தில் அலெக்ஸ் வீட்டின் எதிரே உள்ள நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி வந்துள்ளார். ஏன் இவ்வாறு வேகமாக வருகிறீர்கள் என அலெக்ஸ் தரப்பினர் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றியது. இதனடிப்படையில் அந்த நபர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவல்துறையினர் அலெக்ஸ் வீட்டில் சோதனை செய்துள்ளனர். போலீசார் பறிமுதல் செய்த ஆயுதங்கள் மாட்டிறைச்சி வெட்டி விற்பதற்காக வைத்திருக்கப்பட்ட கருவிகள்' என்று விளக்கம் தெரிவித்துள்ளனர்.

Next Story

“தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான போக்கைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும்.” - தொல்.திருமாவளவன்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Thirumavalavan said Karnataka govt should stop its trend against Tamil Nadu people

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கர்நாடக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கடண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையின்படி ஜூலை 31ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் எனக் கர்நாடக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தினம் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டது. ஆனால் ‘காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் போதுமான மழை பெய்யவில்லையென்றும்;  28% அளவில் குறைவாக மழை பெய்து இருக்கிறதென்றும்; அதனால் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறியுள்ள கர்நாடக அரசு,  காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் மேல் முறையீடு செய்யப்போகிறோம்’ என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஜூலை 14ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. 

கர்நாடகாவில் உள்ள ஹாரங்கி அணையில் 73% தண்ணீரும் ,ஹேமாவதி அணையில் 55 % தண்ணீரும் , கிருஷ்ணராஜ சாகர் அணையில் 54 %  தண்ணீரும் , கபினியில் 96 சதவீதம் தண்ணீரும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கட்டின் முழு கொள்ளளவுக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அவ்வாறு இருந்தும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது எனக் கர்நாடகா அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இந்தப் போக்கைத் கர்நாடக அரசு கைவிட வேண்டும்.

காவிரிப் பிரச்சினையை பொருத்தமட்டில் கர்நாடகாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் ஒரே நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலோ இதிலும் அரசியல் தான் செய்யப்படுகிறது. இந்த நிலையை மாற்றி கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் காவேரிப் பிரச்சனையில் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். 

“கர்நாடக அரசு போலவே தமிழ்நாடு அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகளடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.