ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்யப்போவதாக வெளியான தகவலை அடுத்து இயக்குநர் விசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
![visu](http://image.nakkheeran.in/cdn/farfuture/1pLEpb85OMFQmpjGKfyTc3xybsYhRvYfmydWcASfsPM/1582023288/sites/default/files/inline-images/visu_1.jpg)
அதில், “ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அதில் அந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியிருப்பதாகவும் மேனகா நடித்த கதாபாத்திரத்தில் அவரது மகள் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் எனக்கு வந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி உண்மையாக இருந்தால் அந்தப் படத்தைத் தயாரித்த கவிதாலயா நிறுவனத்திடம் நீங்கள் பேசியிருப்பீர்கள். பாலசந்தரின் மகள் தெரிந்தோ, தெரியாமலோ சில விஷயங்களைச் செய்கிறார்கள். நெகட்டிவ் உரிமை தன்னிடம் இருந்தால் கதை உரிமையை விற்கிறார்கள்.
கவிதாலயா நிறுவனம் என் சம்பந்தப்பட்ட படங்கள் வேற்று மொழிக்கு விற்கப்பட்ட போது என்னிடம் அனுமதி பெறவில்லை. பாலச்சந்தர் என்பவருக்காக நான் வாய் திறக்கவில்லை.
நடிகர், நடிகைகளால் தான் படம் பேசப்படுகிறது அதை நான் மறுக்கவில்லை. நெற்றிக்கண் படத்தைப் பொறுத்தவரை நான்கு தூண்களாக உழைத்தவர்கள் எஸ்.பி.முத்துராமன், இளையராஜா, பிரமிட் நடராஜன், நான்காவது திரைக்கதை வசனகர்த்தா விசு. பின்னர் எப்படி நெற்றிக்கண் திரைப்படத்தை புஷ்பா கந்தசாமி விற்க தனுஷ் வாங்கலாம். என்ன நடக்கிறது. இதுதான் நிறைய எழுத்தாளர்களுக்கு செய்யப்படுகிறது. ஒருவேளை படத்தின் அனைத்து உரிமைகளையும் கவிதாலயாவுக்கு கொடுத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை புஷ்பா கந்தசாமி என்னிடம் கொடுக்க வேண்டும். அப்படி நடந்தால் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். அப்படி எல்லா உரிமைகளையும் விற்கும் போது எழுத்தாளரின் சம்மதமும் வேண்டும். என்னை மொத்தமாக எல்லாம் விற்கமுடியாது. தனுஷ் நீங்கள் படம் ஆரம்பித்த பின்னர் நான் வழக்கு தொடுத்தால் வருத்தப்படக் கூடாது” என்று தெரிவித்திருந்தார். மேலும் கவிதாலயா நிறுவனத்தின் புஷ்பா கந்தசாமியின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் கவிதாலயா நிறுவனம் சர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
![kavithalaya](http://image.nakkheeran.in/cdn/farfuture/wVo9_V4N3xQSHVmkZRmdZo3DA1IR9NmUuHR_rUaKYgQ/1582023258/sites/default/files/inline-images/kavithalaya.jpg)