கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 144 தடை உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. அப்போதே டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த மூடப்பட்ட காலத்தில் தமிழகத்தில் பலயிடங்களில் டாஸ்மாக் கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு சரக்கு பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகின. இதனால் அந்தந்த கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாகச் சரக்குகளைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டது டாஸ்மாக் நிர்வாகம். அந்த உத்தரவுப்படி, அருகில் உள்ள திருமண மண்டபங்கள், தனிநபர்களின் பாதுகாப்பான வீடுகளின் அறைகள் போன்றவற்றில் வைத்து சீல் வைத்தனர். அந்த சீல் மீது அந்தந்த பகுதி தாசில்தார்களும் ஒரு சீல் வைத்து யாரும் எடுக்கமுடியாதபடி செய்தனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு இன்னும் 19 நாட்கள் நீ்ட்டிக்கப்பட்டதால் டாஸ்மாக் நிர்வாகம் தனது ஊழியர்களிடம், பாதுகாப்பாக வைக்கப்பட்ட சரக்குகளை அரசின் குடோனுக்கு கொண்டு வந்து வைக்கும்படி மீண்டும் ஒரு உத்தரவு போட்டுள்ளது, இது டாஸ்மாக் ஊழியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர், தமிழகத்தில் உள்ள 1500 டாஸ்மாக் கடைகளின் சரக்குகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டார்கள். அதன்படி கடையில் இருந்து சரக்குகளைப் பத்திரமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஒரு டெம்போ லாரியில் ஏற்றிக்கொண்டும்போய் பாதுகாப்பாக வைத்தோம். இதற்கே ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, அந்த இடத்துக்கான வாடகை 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை செலவானது. இப்போது குடோனுக்கு கொண்டு வாருங்கள் என உத்தரவிட்டுள்ளார்கள். அப்படி கொண்டும் போய் சேர்க்க வேண்டும் என்றால் வண்டி வாடகை, ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, பாதுகாப்புக்கு வரும் போலிஸ்க்கான செலவு என 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
அது மட்டும்மல்ல அப்படி கொண்டும் போகும்போது பாட்டில்கள் உடைந்தால் அதற்கான தொகையைச் சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படிச் செலவான தொகையை அரசிடமிருந்து நாங்கள் திரும்பப் பெற முடியுமா என்றால் முடியாது, அதற்கு காரணம் தற்போது போடப்பட்டுள்ள உத்தரவுகள் அனைத்தும் வாய்மொழி உத்தரவு மட்டுமே, ஆவணங்கள் ரீதியிலான உத்தரவு என்றால் நீதிமன்றம் மூலம் நீதி பெற முடியும். இது வாய்மொழி உத்தரவு என்பதால் எதுவும் செய்ய முடியாதநிலை. 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரும் அரசாங்கம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை செலவு வைத்துள்ளது. இதனைக் கடையில் பணியாற்றும் சூப்பர்வைஸர், சேல்ஸ்மேன்கன் என மூவர் அந்தச் செலவை பங்கீட்டுள்ளோம். இந்த ஊரடங்கு நேரத்தில் கடுமையான மன வேதனையில், பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் இப்படிக் கூடுதல் சுமையைச் சுமத்துகிறார்கள் என்றார்.
இதனைக் கண்டித்து இடதுசாரி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில அமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.