திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் இரண்டு நாட்களில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இருப்பதால் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் குறிப்பாக, “தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகள், 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் அவர்கள் கவனம் செலுத்தும் நிலையில் மிகக் குறிப்பாக, கோயம்பூத்தூர், ராமநாதபுரம், கரூர், தேனி இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற எந்த எல்லைக்கும் செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து ட்விட்டரில்,“கரூரில் வேட்புமனு துவங்கி இந்தநிமிடம் வரை அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடி வருகிறோம். இடையில் தேர்தல் ஆணையம் எஸ்.பியை மாற்றியது. இன்னும் தேர்தலை நிறுத்த பரிந்துரை செய்வேனென்று தேர்தல் அதிகாரி இருக்கிறார்.ஒரே நம்பிக்கை தமிழக தேர்தல் ஆணையம் மட்டுமே” என்று கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.