Skip to main content

“ஆளுமை மிக்க நாற்காலி காத்துக்கொண்டிருக்கிறது” - அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்!

Published on 08/05/2025 | Edited on 08/05/2025

 

The majestic chair awaits Minister Anbil Mahesh Advice for students

தமிழகத்தில் 2024 - 25ஆம் கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 03ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தன. இதனையடுத்து இந்த பொதுத் தேர்வை எழுதிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்தனர்.

இத்தகைய சூழலில் தான் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (08.05.2025) வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 09.00 மணிக்கு வெளியிட உள்ளார். அதே சமயம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.resultsdigilocker.gov.in என்ற இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வர்கள் இந்த இணையதள முகவரிகளில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

அதோடு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி மாணவர்களுக்கு  சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம். முதலமைச்சரின் கூற்றுப்படி “இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன். மதிப்பெண்களை அளவாகக் கொள்ளாமல், தங்களின் திறமைகள் சார்ந்த துறைகளில் மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு. மாணவர்களே உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்