
சென்னை திருவொற்றியூர் டி.எஸ்.ஆர் ஒத்தக்கடை தெருவைச் சேர்ந்தவர் ரகு(35). கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். ரகுவிற்கு ரேவதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ரகுவிற்கு அதிகளவில் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மனைவி ரேவதி அடிக்கடி கேட்டு வந்துள்ளார். மேலும் எப்படி இவ்வளவு கடன் ஏற்பட்டது வேறு யாருடனாவது தொடர்பில் இருக்கிறாயா? என்று கேள்வி எழுப்பி வந்திருக்கிறாராம். அதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட, ரகு, ரேவதியை அடித்துத் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த குடும்பத் தகராறு காரணமாக ரேவதி கோபித்துக்கொண்டு தனது தங்கையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் ரேவதியை சமாதானம் செய்து ரகு தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பிள்ளைகள் உறவினர்கள் வீட்டிற்குச் சென்ற நிலையில், ரகு மற்றும் ரேவதி இருவரும் மட்டுமே தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த சூழலில் தான், ரகுவிற்கும் ரேவதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் நேற்று(7.5.2025) அதிகாலை 2.30 மணிக்கு வீட்டிற்கு வந்த ரகு மனைவி ரேவதியை அடித்துத் தாக்கியுள்ளார். அதன்பின்பும் ஆத்திரம் குறையாததால், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரேவதியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பின்னர் போதை தெளிந்து ரகு, ரேவதி இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு காவல்துறைக்கு பயந்து, மனைவியை குத்தி கொன்ற கத்தியால், தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகுவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். ரேவதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.