
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்துள்ள படுகை புதுத்தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவருடைய 2வது மகள் ஆர்த்திகா. இவர் பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்த வகையில் இவர் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். அதே சமயம் வீட்டில் உள்ளவர்களிடம் தேர்வு எழுதி முடித்ததில் இருந்து இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவேனா?, தேர்ச்சி பெறமாட்டேனா? என அவருடைய தங்கைகளிடமும் பெற்றோரிடமும் புலம்பிக் கொண்டே இருந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் நேற்று (07.05.2025) மாலை தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தோல்வி பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று (08.05.2025) காலை 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதில் ஆர்த்திகா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளார். அதோடு அவர் மொத்தமாக 413 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக விலங்கியல் பாடத்தில் அதிகபட்சமாக 80 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 72, ஆங்கிலத்தில் 48, இயற்பியலில் 65, தாவரவியலில் 70 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். மாணவியின் மதிப்பெண்களை கண்டு பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவர்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி இந்த ஆண்டின் தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆகும். அதிலும் குறிப்பாக மாணவிகள் 96.70 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16% தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த பொதுத் தேர்வில் வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக 3.54% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.82% உடன் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.