Skip to main content

ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Published on 08/05/2025 | Edited on 08/05/2025

 

Helicopter incident; 5 people tragically lost their lives

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் ஒன்று உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி  மாவட்டத்தில் உள்ள கங்கனானி பள்ளத்தாக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 6 பயணிகளும் ஒரு கேப்டனும் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர் என்ற தகவலை கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே உறுதிப்படுத்தியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு  நிவாரணக் குழுக்கள் சென்று  மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த ஹெலிகாப்டர் ஏரோ டிரான்ஸ் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெல் 407 வி.டி. - ஓ.எக்ஸ்.எஃப். ஹெலிகாப்டர் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 5 பேருக்கும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதே சமயம் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும், விபத்து குறித்து விசாரிக்கவும் முதல்வர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் என அம்மாநில முதல்வர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் சார்தாம் யாத்திரை என்று சொல்லக்கூடிய பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரைக்கான பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஈடுபட்டிருந்தது எனவும், அச்சமயத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்