சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவங்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த 1962 முதல் 1982ம் ஆண்டுகளில் கோவில் அறங்காவலர்களாக இருந்த பொன்னுசாமி, ரத்தினவேல் மற்றும் பாலசுந்தரம் ஆகியோர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, கோவில் நிலங்களில் அறநிலையத் துறை அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது. ஆனால், காரணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதுடன், அந்த நிலங்களில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் எழுப்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
கோவில் நிலங்களில் வாடகைதாரர்கள் பலர் இருந்த போதும், 79 பேர் செலுத்தும் வாடகை விவரங்களை மட்டுமே அறநிலையத் துறை வழங்கியதாகவும், இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளையபெருமாள் ஆஜராகி வாதிட்டார். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலைய துறை தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 2வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.