தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் அன்பில் மகேஷ், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் கள்ளக்குறிச்சியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையராக இருந்த பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேளாண் துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தார். மேலும் மாற்றம் செய்யப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர், சென்னை - கன்னியாகுமரி தொழில் தடம் எனும் புதியத் திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், உளவுத்துறை மற்றும் காவல்துறையின் முக்கிய நபர்கள் மாற்றப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.