கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், தற்போது நடைபெற்றுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்களில் தெளிவு இல்லை என்பதால் இரண்டாவது முறை மாணவியின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வன்முறை தொடர்பாக நேற்றே செய்தியாளர்களை சந்தித்திருந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 'பள்ளி வளாகத்தை தாக்குவது, காவல் வாகனத்தை தாக்குவது, காவல்துறையினரை தாக்குவது போன்ற சம்பவங்களை தொடர்ந்து நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவு ஆதாரங்களுடன் பிற்காலத்திலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்' என தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.