அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாநில வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் பிறந்தநாள் அன்று அவரது குடும்பத்தினர் குருவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து தொண்டர்கள் கலந்துகொண்டனர். அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் தாலுக்காவில் இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 15 டிஎஸ்பிக்கள், 10 ஏடிஎஸ்பிகள், 25 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அன்று செய்தியாளர்களை சந்தித்த குருவின் மகன் கனலரசன், "வன்னியர் சமூகத்தை மீட்டெடுத்து அவர்களின் நலன் காப்பதற்காக மாவீரன் மஞ்சள் படை என்ற ஒரு அமைப்பை துவங்கி உள்ளோம். மாவீரன் குருவின் பிறந்தநாளை முழுமையாக கொண்டாட விடாமல் 144 தடை விதித்துள்ளனர். இந்த தடை எங்களை எதுவும் செய்ய இயலாது. மேலும் வன்னியர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு காடுவெட்டி வன்னியர்களின் ஒவ்வொரு உழைப்பும் அதில் உள்ளது. கிராம குழந்தையின் உண்டியல் பணத்தால் இக்கட்டடம் கட்டப்பட்டதாகும். இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் இறந்த இருபத்தோரு குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்க அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். விரைவில் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கிராமங்களுக்கும் சென்று மஞ்சள் படையின் நோக்கங்களை கூறி இளைஞர்களை திரட்ட உள்ளோம்" என்று கூறினார்.