திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தையல் ஆசிரியை ஒருவர், 'போக்சோ' தண்டனை கைதியால் கொடூரமாக மானபங்கம் செய்யப்பட்டதை, சிறை அதிகாரிகள் மூடி மறைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சிறைகளில் தண்டனைக் கைதியாக உள்ளவர்கள் படிப்பதற்காக திருச்சி மத்திய சிறையில் ஐ.டி.ஐ. செயல்படுகிறது.
கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற திருமூர்த்தி (25) என்பவர், உட்பட 35 தண்டனை கைதிகள், திருச்சி மத்திய சிறையில் தங்கி தையல் படிக்கின்றனர். அவர்களுக்கு 45 வயதுடைய தையல் ஆசிரியை வகுப்பு நடத்தி வருகிறார். 1 ஆம் தேதி காலையில் நடந்த வகுப்பிற்கு பின், பகல் 11:45 மணிக்கு கைதிகள் சாப்பிடச் சென்றனர். கைதி திருமூர்த்தி சாப்பாட்டை முடித்து முன்னதாகவே வகுப்பறைக்கு வந்தார். அங்கு தனியாக இருந்த ஆசிரியையின் வாயில் துணியை அடைத்து சத்தம் போடவிடாமல் செய்தார்.
அதன்பின் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அவரைக் கடித்தும், நகங்களாலும் காயங்களை ஏற்படுத்தினார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை, திருமூர்த்தியிடம் இருந்து விடுபட்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து, 'குத்தி விடுவேன்' என மிரட்டினார்.
அந்த கைதி ஆசிரியையை விட்டு, குளியல் அறையில் ஒளிந்து கொண்டார். இது குறித்து, சிறைத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கச் சென்ற ஆசிரியையிடம், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், 'இதனால் உங்களுக்குத்தான் கெட்ட பெயர், அசிங்கம். அப்படியே விட்டுவிடுங்கள்' என மிரட்டல் தொனியில் கூறினார். அங்குள்ள பெண் அதிகாரியும் ஆசிரியைக்கு ஆறுதல் கூறாமல், புகார் கொடுக்கக் கூடாது என்பது போல மிரட்டினார். இதனால் மனமுடைந்த ஆசிரியை அங்கிருந்து சென்றிருக்கிறார்.