விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.
இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.