கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வியாபாரத்திற்கு ஒரு ஏக்கர் அளவில் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனையொட்டி இன்று (30.11.2021) கோயம்பேடு தக்காளி மார்க்கெட்டுக்குப் பின்புறம் கீரை, கொத்தமல்லி வியாபாரம் செய்யும் இடத்தை சுத்தம்செய்து இடம் ஒதுக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுத்தம் செய்யும் பணிகளை சி.எம்.டி.ஏ. அதிகாரி டி.ஆர்.ஒ. சாந்தி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது மீன்பாடி வண்டி இழுக்கும் தொழிலாளர்கள் திடீரென்று ஒன்றுசேர்ந்து கூச்சலிட்டனர். அவர்களிடம் பேசியபோது, "கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இருந்தாலும் எங்களுக்கு முன்கூட்டியே இடத்தைக் காலி செய்ய அவகாசம் தராமல் திடுதிப்பென்று அதிகாரிகள் வந்து எங்கள் வண்டிகளை அப்புறப்படுத்தச் சொன்னால் நாங்கள் எங்கு போவது? இரவெல்லாம் கண் விழித்து வேலை பார்த்துவிட்டு பகலில்தான் தூங்குவோம். பாதிபேர் தூங்கப் போய்விட்டனர். இப்போது அனைத்து வண்டிகளையும் எப்படி உடனே அப்புறப்படுத்த முடியும்" என்று புலம்பினர். இதைக் கேட்ட டி.ஆர்.ஒ., வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்குத் தனி இடம் ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்தார். பின்னர் வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.