"காலுக்கு செருப்பு மில்லை...
கால் வயிற்று கூழுமில்லை..,
பாழுக்கு உழைத்தோமடா,
என் தோழனே:,
பசையற்றுப் போனோமடா..., "
என இந்திய தொழிலாளிகளின் வாழ்வியல் நிலையை தனது பாட்டால் உரத்துக் கூறியவர் ப.ஜீவானந்தம்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு 10 ஆண்டுகள் சிறை பட்டவர் ஜீவானந்தம். தேசத்தந்தை மகாத்மா காந்தியால் நீங்கள் இந்தியாவின் சொத்து என்று அழைக்கப்பட்டவர் தான் ஜீவானந்தம். பொதுவுடமை இயக்கத்தில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர்.
ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முதல் பத்திரிகையாளரும் ஜீவானந்தமே, ஆம், மாவீரன் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன் என்ற நூலை ஜீவானந்தம் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதற்காக அப்போதைய அரசு ஜீவானந்தத்தை கைது செய்தது.
கவிதை, கட்டுரை, பாடல்கள் என ஏராளமான நூல்களை எழுதியவர். மேடைப் பேச்சில் ஜீவாவின் பேச்சுக்கள் ஒரு கர்ஜனையாக எதிரொலிக்கும் என அனைத்து கட்சி தலைவர்களிடமும் பாராட்டைப் பெற்றவர்.
1963 ஜனவரி 18 ல் ஜீவானந்தம் மறைந்தார். ஜீவாவின் 57 ஆவது வருட நினைவு நாள் இன்று. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ஜீவாவின் நினைவுநாளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் அவரது படத்திற்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டது.
ஜீவாவின் சொந்த ஊரான குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள அவரது சிலைக்கு கலை இலக்கிய பெருமன்றம் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள். அதேபோல் சென்னை தாம்பரத்தில் உள்ள ஜீவாவின் சிலைக்கு கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மற்றும் ஜீவாவின் மகன் ஜீவாமணிக்குமார் உட்பட பலரும் மலர் மரியாதை செலுத்தினார்கள்.
ஈரோடு, கோவை, சேலம், மதுரை, கடலூர் என அனைத்து பகுதியிலும் ஜீவாவின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.