
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவை பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 20 ஆயிரத்துக்கும் மேலாக தொற்று பதிவாகி வருகிறது. இதன்காரணமாக, நாளை (06.05.2021) முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் 12 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கி வருகின்றன. கரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், டாஸ்மாக் செயல்படும் நேரத்தைக் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.