
தமிழக மின் வாரியங்களில் உள்ள மின் வாரிய துணை மின் நிலையங்களில், மின் உற்பத்தி நிலையங்களையும் பகிர்மான பணிகளையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதாக தமிழக அரசைக் கண்டித்து திருச்சி மன்னார்புரம் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அலுவலகத்தில் இன்று 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் வாயிலாக அவர்கள், ஹெல்பேர் மற்றும் ஒயர்மேன் உள்ளிட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்துவது என்பது தனியாரை பின் வாசல் வழியாக உள்ளே நுழைப்பது போன்றது என்று குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் 50 ஆயிரம் கேங்மேன்கள் பணியிடம் காலியாக உள்ள நிலையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்துவது கண்டிக்கத்தக்கது.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சரிடம் பேசுகையில், ‘நாங்கள் பணியமர்த்தும் சூழல் தற்போது இல்லாமல் போனதற்கான காரணம், அவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள்.’ என்ற காரணத்தைக் காட்டி உள்ளார்கள். எனவே பணியமர்த்த முடியவில்லை என்று பதில் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் அரசே முன்வந்து இந்த தனியார் மயமாக்கலை நிறுத்தி அதிகாரிகள் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஓய்வு பெற்றவர்களை பணிபுரியச் செய்வது என்பது ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது உள்ளிட்ட செயல்களை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அரசு அவர்கள் போட்ட இந்த ஒப்பந்தங்களைத் திரும்பப் பெறும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.