திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டிருந்தார். அத்தோடு ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் எஸ்.பி. சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதற்கிடையில் ஜெயக்குமார் தனசிங் தனது மருமகனுக்கு கைப்பட கடந்த 27 ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றும், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெயக்குமாரின் மூத்த மகன் கருப்பையா ஜெப்ரின், இளையமகன் மார்ட்டினிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் 9 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில், ‘திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்களால் தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.