![jaffer](http://image.nakkheeran.in/cdn/farfuture/PLKC4TowZMmQKjygMr0Z9GCiHwtxojtRlbVtHrmS1j4/1726660338/sites/default/files/inline-images/a781_0.jpg)
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திரைப்பட இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதை தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து சென்னை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள இந்த வழக்கில் வேறு யாரெல்லாம் இடம் பெற்றுள்ளார்கள் என்பது தெரியாமல் இருந்து வந்தது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாபர் சாதிக் சகோதரர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் முன்ஜாமீன் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தற்போது மொத்தம் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக் மற்றும் அவருடைய சகோதரர் முஹம்மது சலீம், மனைவி அமீனா பானு மற்றும் திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமாக 12 நபர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.அதோடு மட்டுமல்லாது ஜாபர் சாதிக் நடத்தி வந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் இயக்குநர் அமீர் அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகி இருந்தார். தொடர்ந்து தனக்கும் இந்த வழக்கத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்திருந்தார். குற்றப்பத்திரிகையில் உள்ள நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேதி குறிப்பிட்டப்பட்ட பிறகு குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.