திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் இயங்கி வருகிறது பாரி ஸ்வீட்ஸ், 5 ஸ்டார் பிரியாணி, 7 ஸ்டார் பிரியாணி கடைகள். இதில் 5 ஸ்டார், 7 ஸ்டார் பிரியாணி ஹோட்டல்களுக்கு ஆரணி நகரிலேயே கிளைகளும் உண்டு. பிரபலமான இந்த கடைகளில் தினமும் லட்சங்களில் வியாபாரம் நடக்கின்றன.
இந்த கடைகளில் மார்ச் 2ந்தேதி மாலை திடீரென வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 15 பேர் புரனசந்த்மீனா தலைமையில் ரெய்டு நடத்தினர். ஹோட்டல்கள், ஸ்வீட் ஸ்டால்கள், வீடுகள் என 5 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், சரியாக வருமான வரி செலுத்ததற்கான ஆவணங்கள் என பலவற்றை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பாரி ஸ்வீட்ஸ் என்பது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனின் வலது கரமும், திருவண்ணாமலை பால்கூட்டுறவு சங்க மாவட்ட துணை தலைவராக இருந்த பாபு என்பவருக்கு சொந்தமானதாகும். அதிமுக, கூட்டுறவு சங்க பிரமுகர் கடையில் வருமானவரித்துறை ரெய்டு செய்தது அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆளும்கட்சியினர் சிலர், அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், சிலர் மூலமாக மறைமுகமாக, நேரடியாக தொழில் நிறுவனங்களில் பணத்தை பினாமி பெயர்களில் முதலீடு செய்துள்ளார். அந்த முதலீடுகளின் வலைப்பின்னலை அறியவே இந்த ரெய்டு நடத்துகிறார்கள் அதிகாரிகள். கடந்த வாரம் பிரபலமான ஆரணி பட்டு உற்பத்தி நிறுவனத்தில் ரெய்டு நடத்தினார்கள், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார். எங்களுக்கு என்னவோ அமைச்சரை குறிவைத்து தான் இந்த ரெய்டு நடத்துவதாக நினைக்கிறோம் என்கிறார்கள்.
வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பிலோ, தினமும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யும் இந்த நிறுவனங்கள் வருமானவரி தாக்கல் செய்ததில் பல குளறுபடிகள் உள்ளன. அதனால் தான் இந்த ரெய்டு என்கிறார்கள்.