கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தினர் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்ட விதிமுறைகளைத் திருத்தி கடந்த இரு நாட்களுக்கு முன்பு (30.03.2020) புதிய அரசாணையைப் பிறப்பித்திருக்கிறது எடப்பாடி அரசு.
’’தமிழகத்தைக் கரோனா தொற்று நோய் பரவும் மாநிலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்களிடையே அச்சம் பரவியுள்ள சூழலில், தனியார் நலன்களுக்கான கடுமையாக உழைக்கிறது எடப்பாடி அரசு‘’ என்கிற குற்றச்சாட்டுகளை சுமத்துக்கிறார்கள் சுற்றுச் சூழலியாளர்கள்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக கடந்த 25 ஆண்டுகளாக களத்தில் போராடி வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.இந்த அமைப்பின் மூத்த உறுப்பினரான சுந்தர்ராஜன், ’’இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைக் கடந்த 26.12.2004-ல் சுனாமி தாக்கியது. அப்போது,இந்திய காப்புரிமைச் சட்டத்தில் மிகவும் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்தது அப்போதைய காங்கிரஸ் அரசு. அதற்கான சட்டத் திருத்தத்தில் அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையொப்பம் இட்டார்.
சட்டத்திருத்தம் செய்யப்படும் வரை, ஒரு பொருள் செய்யப்படும் முறைக்கு மட்டுமே காப்புரிமை (Process patent) வழங்கப்பட்டு வந்தது.ஆனால், ஒரு பொருளுக்கே காப்புரிமை (Product patent) வழங்கும் உரிமை அந்த சட்டத்திருத்தம் வழங்கியது.குறிப்பிட்ட பொருளைக் காப்புரிமை பெறாத மற்ற நிறுவனங்கள் வேறு முறைகளில் உற்பத்தி செய்வதைத் தடுக்கும் சட்ட நடைமுறை அது.இதன் மூலம் பெருவணிக நிறுவனங்களின் குறிப்பிட்ட பொருட்களின் மீதான ஏகபோக உற்பத்தி உரிமை மேலும் வலுப்படுத்தப்பட்டது.
![isha](http://image.nakkheeran.in/cdn/farfuture/17vofntKWWIurcsJ5pJtxqNnQglAmlIE3fuDYaYM4Hg/1585816894/sites/default/files/inline-images/aqaq.jpg)
உயிர் காக்கும் மருந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இது மக்களுக்கு எதிரான விளைவுகளைத் தரக்கூடியது. ஆளும் வர்க்கம் சொல்லியதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்ட அப்துல் கலாம்,மக்களுக்கு எதிரான இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்து அன்று கையெழுத்திட்டார்.
இப்படிப்பட்ட சூழலில், தற்போது கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தும் சூழலில் மிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் ஒரு சட்டத்திருத்தத்தைக் கடந்த 30.03.2020 செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழகத்திலுள்ள மலைப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக ‘மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பு (Hill Area Conservation Authority – HACA) ’ கடந்த 1990-ஆம் ஆண்டு Town and Country Planning Act கீழ் நிறுவப்பட்டது.
காட்டுப்பகுதி சுருங்கி வருவதைத் தடுப்பதற்காகவும், காடு சார்ந்த வளங்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்படுவதாகக் கூறப்பட்டது. தமிழ்நாட்டில் உயிரியல் பன்மை வளமிக்க மலைப் பகுதியாக,மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள சூழலில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் உள்ள காடு மற்றும் காட்டுக்கு அருகாமையில் உள்ள இடங்கள் இந்த ‘மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பின் ‘ பொறுப்பில் விடப்பட்டன. அந்த வகையில், இப்பகுதியில் இருக்கும் நிலத்தை எந்தப் பயன்பாட்டுக்கு மாற்றி அமைத்தாலும், இவ்வமைப்பின் அனுமதியுடன் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் அந்த நில அமைப்பு மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கமுடியும்.
இந்த நிலையில் கடந்த 2016, அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன்னதாக மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் நிலம் வாங்கியவர்கள் அந்தப் பகுதிகளில் வீட்டுமனை வியாபாரம் செய்யும் வகையிலும், கட்டிடங்கள் எழுப்புவதற்கு அனுமதிக்கும் வகையிலும் புதிய சட்டவிதிமுறைகள் (Tamil Nadu Regularization of Unapproved Layouts and Plots in Hill Areas Rules, 2020 ) வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை கடந்த 30.3.2020 பிறப்பித்திருக்கிறது எடப்பாடி அரசு.
![rrrr](http://image.nakkheeran.in/cdn/farfuture/hGpb7Lx93FKyJgVGmgUDwvmb2biVeNzXCRoGepqK8pU/1585816914/sites/default/files/inline-images/aqaq111.jpg)
இந்த விதிமுறைகள் மூலம் உரிய சட்ட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கின்ற வாய்ப்புகளும் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளிடமோ, மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பு உறுப்பினர்களிடமோ எவ்விதமான ஆலோசனையும் மேற்கொள்ளாமலே இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நிலம் வாங்கிய ஏழை மற்றும் அப்பாவி மக்களின் துயர் துடைப்பதற்காக இந்தப் புதிய விதிமுறை வகுக்கப்படுவதாக அரசாணையின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.யானை வழித்தடம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்குள்தான் சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது.இந்த ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதி யானை வழித்தடம் என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் ,அப்பகுதியை யானை வழித்தடம் என அறிவிக்க வேண்டிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுவரை அவ்வாறு அறிவிக்கவில்லை.
ஆக, அப்பகுதிகளில் மிகப் பிரமாண்டமான கட்டிடங்களையும், சிலைகளையும் நிறுவியுள்ள ஈஷா மையம், தற்போதைய புதிய விதிமுறைகளின் கீழ் பலன் அடையப்போகிறது.இந்த ஈஷா மைய நிர்வாகிகளை ஏழைகள் என்றோ, படிப்பறிவற்ற அப்பாவிகள் என்றோ குறிப்பிடமுடியாது.ஈஷா யோகா மையத்திற்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகிய அமைப்புகளின் முன் நிலுவையில் இருக்கும் நிலையில்,இந்தப் புதிய விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசு கண்டனத்திற்குரியது.புதிய விதிமுறைகள் ஈஷா மையம் உள்ளிட்ட பெரும் பணக்கார தனியார் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வகுக்கப்பட்டிருக்கிறது.