அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்தது. அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரினர். அதனடிப்படையில் இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024 இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. மேலும் இந்த மாதம் 23 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் சார்பில் இன்று (11.06.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அறிவிக்கை எண் 01/2024 இன் படி 23.06.2024 அன்று நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் (SGT) தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேர்வானது வருகின்ற 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.