கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மணிமுத்தாறு ஆற்றுப்படுகையில் வயல் வெளிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், தியாகராஜபுரத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவர் தனது விளைநிலத்தில் மரவள்ளி பயிர்களைப் பயிரிட்டுள்ளார். அதன் நடுவே ஊடுபயிராக கஞ்சா செடிகளை வளர்த்துவந்தது தெரியவந்துள்ளது.
அவரது நிலத்தின் அக்கம்பக்கம் நிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அப்பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கும்கூட எந்தவித சந்தேகமும் வராத அளவில் மரவள்ளி பயிரின் நடுவே ஊடுபயிராக கஞ்சா செடிகளை வளர்த்துவந்துள்ளார். இதைக் கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார், கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா செடி வளர்த்த அய்யாக்கண்ணு மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பு தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.