கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் தெரு நாய் ஒன்று வெறிபிடித்து 20க்கும் மேற்பட்ட நபர்களைக் கடித்து குதறியது. இதன் எதிரொலியாக திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் முதற்கட்டமாக 35தெரு நாய்களைப் பிடித்து, நகராட்சிக்கு கொண்டு வந்து நாய்களுக்கு வெறிபிடிக்காமல் இருப்பதற்கு ஆன்டி ரேபிஸ் எனப்படும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரையில் இருந்து நாய் பிடிக்கும் குழுவை வரவழைத்து நகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களைப் பிடித்து வெறி பிடிக்காமல் இருக்கவும், வெறி பிடித்தாலும் கடித்தால் அதன் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்காக ஆண்ட்டி ராபீஸ் தடுப்பூசியைத் திருக்கோவிலூர் கால்நடை மருத்துவர்கள் சுகுமார், ஆலமரத்தான், விக்னேஷ் ஆகியோர் தடுப்பூசி போடும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஒரே நாளில் 35 நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதேபோல் நகராட்சி பகுதி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து மாடுகளைப் பிடித்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது அதன் உரிமையாளர்களுக்கு முதற்கட்டமாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.