
அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்கு சிட்டா அடங்கல் வழங்காத கிராம நிர்வாக அலுவலரைக் கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் நெல் மூட்டையை அடுக்கி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவேந்தன். இவர் ஐந்து நாட்களுக்கு முன்பு தனது வயலில் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்காக, கிராம நிர்வாக அலுவலர் சிவசண்முகம் என்பவரிடம் சிட்டா அடங்கல் கேட்டுள்ளார்.

விவசாயி கலைவேந்தனுக்கு கிராம நிர்வாக அலுவலர் சிட்டா அடங்கல் வழங்காமல் மூன்று நாட்களாக அலைக்கழித்துள்ளார். மூன்று நாட்களாக நடையாக நடந்து ஆத்திரம் அடைந்த விவசாயி, நெல் மூட்டைகளை வாடகை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாசலில் அடுக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டார். வட்டாச்சியர் அலுவலகத்தில் நெல்மூட்டைகள் அடுக்கியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து அங்குவந்த வட்டாட்சியர், விவசாயிக்கு உடனே சிட்டா அடங்கலை வழங்குவதாக உத்தரவு அளித்தார். சிட்டா அடங்கலைக் கையோடு பெற்ற விவசாயி நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்றுள்ளார். விவசாயி ஒருவரின் நூதன போராட்டம் பரபரப்பை உண்டாக்கியது.