
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் கிளை சார்பில் ஆக்சிஜன் புளோமீட்டர்கள் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவிவரும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புதிதாக ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலினும் அதிரடி நடவடிக்கையால் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பிரிவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் கிளைகள் சார்பில் ஆக்சிஜன் புளோ மீட்டர்கள் வழங்கி உதவி செய்துள்ளனர். புளோ மீட்டரை திருவாரூர் மருத்துவக் கல்லூரி டீன் மருத்துவர் ஜோசப்ராஜிடம், இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைத் தலைவர் மருத்துவர் பாரதிதாசன், திருவாரூர் கிளைத் தலைவர் மருத்துவர் ஜின்ரீவ் டேனியல், செயலாளர் மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் கிளை மருத்துவர்கள் செய்திருந்தனர்.