தமிழக அரசியலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவராத நிலையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இன்னும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அமுமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு எப்படி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்கிற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அமமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்றது. இதில் அமமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி பேசியபோது..
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் 1 தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெற முடியாது. 20 தொகுதியிலும் அமமுக வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். தம்பிதுரை மக்களவை துணைத் தலைவராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளில் கரூர் தொகுதிக்கு செய்தது என்ன? முதல்வர் பதவி மீது தம்பிதுரைக்கு ரொம்ப ஆசை.
நான் ஜெ.விடம் அரசியல் பயின்றவன். ஆனால் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமியிடம் அரசியல் பயின்றவர். அவருக்கு இவ்வளவு கோபம் வருது என்றால், நான் ஜெ.விடம் பயிற்சி பெற்ற எனக்கு எவ்வளவு கோபம் வரும் என்பதனை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரவக்குறிச்சி தொகுதியில் என்னை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். இல்லை கரூர் தொகுதியில் போட்டியிட தயார் என்றாலும் அங்குள்ளவர் ராஜினாமா செய்யட்டும். நான் கரூர் வரவும் தயாராக உள்ளேன். ஒருவர் 2 தொகுதியில் போட்டியிடலாம். எனவே கரூர் தொகுதி எம்எல்ஏ விஜயபாஸ்கர் அரவக்குறிச்சி தொகுதியிலும் போட்டியிடட்டும். யார் வெற்றி பெறுவார் என பார்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.