
அசாமில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ ஒருவர் ஒப்பந்ததாரரை வாழை மரத்தைக் கொண்டு தாக்கும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 18 ஆம் தேதி அசாமின் கிழக்கு பிலாசிபாராவைச் சேர்ந்த AIUDF கட்சி எம்எல்ஏ ஷம்சுல் ஹுடா, பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது விழாவிற்கான செய்யப்பட்ட ஏற்பாடுகளை ஹுடா பார்த்து அதிருப்தி அடைந்தாகக் கூறப்படுகிறது. அடிக்கல் நாட்டு விழாவிற்கு உயரமான வாழை மரங்களில் சிவப்பு ரிப்பன் கட்டப்படும் என்று எம்.எல்.ஏ எதிர்பார்த்தார்.
ஆனால் மாறாக ஒப்பந்ததாரர் ஒன்றரை அடி உயர வாழை மரங்களில் கட்டப்பட்ட நூல் போன்ற இளஞ்சிவப்பு ரிப்பனை ஏற்பாடு செய்திருந்தார். ரிப்பனை வெட்ட எம்எல்ஏ குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஹுடா, தனது அருகில் நின்ற ஒப்பந்ததாரரின் ஊழியரின் காலரைப் பிடித்து கடுமையாக அறைந்தார். அதோடு நிற்காமல் இரண்டு வாழை மரங்களில் ஒன்றை பிடுங்கி அவரைத் தாக்கத் தொடங்கினார்.
அங்கு நின்றவர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். எம்.எல்.ஏவின் கோபத்தைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் அவினாஷ் அகர்வாலா ஏற்பாட்டில் ஏற்பட்ட பிழைகளுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டார். எம்.எல்.ஏவின் செயல் பரவலான விமர்சனங்களை பெற்றது. பின்னர் எம்எல்ஏவும் மன்னிப்பு கோரினார்.
தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஹுடா, ''அது நடந்திருக்க கூடாது. ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பொது இடத்தில் அப்படிச் செய்தது சரியல்ல. ஆனால் சூழல் என்னைக் கட்டாயப்படுத்தியது. எனவே நடந்ததற்கு அசாம் மக்கள் அனைவரிடமும், பிலாசிபாரா மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று ஹுடா கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த சம்பவத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.