



75 வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (15/08/2021) மாலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்றக் குழு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "மாநில அரசின் நடவடிக்கைகளால் பல துறைகளில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. கடின உழைப்பும், வெளிப்படைத்தன்மைக் கொண்ட ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சருக்கு பாராட்டுகள்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குறள் பன்னாட்டு பதிப்பு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.