திருச்சி மாவட்டம் சிறுகனூர் முகமதியர் தெருவைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவருடைய குழந்தைகள் அஜிரா பானு வயது 11, முகமது அசீர் வயது 8, இவர்கள் இருவரும் பாடாலூர் பள்ளியில் 5 ஆம் வகுப்பு, 3 ஆம் வகுப்பு படிக்கிறார்கள். அதே தெருவில் வசிக்கும் ஆதம்சாவின் மகள் ரிஸ்வான வயது 10, இவர் இருங்களுரில் உள்ள பள்ளியில் படிக்கிறார்.
கடந்த சில நாட்களாக திருச்சியில் பெய்த மழையில் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் உள்ள காட்டாற்றில் தண்ணீர் தேங்கி நின்றது. இதில் இந்த 3 குழந்தைகளும் அந்தக் காட்டாற்றில் விளையாடி இருக்கிறார்கள். குளிப்பதற்காக உள்ளே இறங்கியபோது ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கியிருக்கிறார்கள். 3 குழந்தைகளில் அபாயக் குரலை கேட்டுக் காப்பற்ற செல்வதற்குள் 3 குழந்தைகளும் முழ்கி இறந்து போனார்கள்.
இந்தக் காட்டாற்றில் அனுமதி இன்றி பொக்லைன் இயந்திரம் மூலம் கள்ளத்தனமாக மணல் அள்ளி கூடுதல் விலைக்கு விற்று இருக்கிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் மக்கள், இதனால்தான் இந்தப் பள்ளத்தில் 3 குழந்தைகள் விழுந்து நீரில் முழ்கி இறந்து போனார்கள் என்கின்றனர்.
சமீபத்தில் தான் திருட்டு மணல் அள்ளுவதற்கு உதவுவதாக சிறுகனூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனின் மீது கொடுக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.