தேனி போடியில் குடியிருந்து வரும் பாண்டி லட்சுமி தம்பதிகளுக்கு பத்தொன்பது வயதில் அனுசியா, பதினாறு வயதில் ஐஸ்வர்யா, ஏழு வயதில் அக்க்ஷயா என மூன்று பெண்கள் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு லட்சுமியின் கணவர் பாண்டி இறந்துவிட்டார்.
இதனால் லட்சுமி மூன்று பெண்களை வைத்து வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து கஷ்டப்பட்டு வந்தவர். இனி வரும் காலங்களில் எப்படி மூன்று பிள்ளைகளையும் கரைசேர்க்க போகிறோமோ என மனம் நொந்து போய் இருந்த தாய் லட்சுமிக்கு அவரது அண்ணன் அவ்வப்போது வந்து ஆறுதல் கூறியும் வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் வழக்கம்போல் தூங்கி எழுந்த லட்சுமி தன் பிள்ளைகளை பார்த்து கண்கலங்கிவிட்டு டீக் கடைக்கு சென்று காபி வாங்கி வந்தவர், அந்த காபியில் விஷத்தை கலந்து நான்கு டம்ளர்களிலும் ஊற்றி தூங்கி கொண்டிருந்த மூன்று பிள்ளைகளையும் எழுப்பி அந்த விஷம் கலந்த காபியை கொடுத்து குடிக்கசொல்லிவிட்டு தானும் அழுதவாரே குடித்தார்.
அடுத்த சிறிது நேரத்திலேயே தாய் உள்பட நான்கு பேருமே வாயில் நுரை தள்ளி கீழே விழுந்து கிடந்தனர். அதைக்கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக லட்சுமியையும், மூன்று பிள்ளைகளையும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அனுசியாவும், ஐஸ்வர்யாவும் பரிதாபமாக இறந்தனர். ஆனால் லட்சுமி, அக்ஷையா உடல்நிலை மோசமடைந்து வருதைக்கண்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் போடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போடி நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் தொகுதியில் இப்படி ஒரு சோகமான சம்பவம் நடந்ததை அறிந்த துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்னையில் இருந்து போடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.