கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 54,000 மீட்டர் பரப்பளவில் சுவை மிகுந்த மாங்கனிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாங்கனிகளுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத் துறை சார்பில் அகில இந்திய மாங்கனி விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி இன்று கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் துவங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சரயு தலைமை வகித்துத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்று முதல் 25 நாட்கள் நடைபெறும் இந்த மாங்கனி கண்காட்சியில் மா போட்டி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட 172 ரக மாங்கனிகள் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் மாங்கனிகளால் உருவாக்கப்பட்ட ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் வண்ண மலர்களால் வண்ணத்துப்பூச்சி, ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் திருத்தேர், மற்றும் 14 வகை நறுமணப் பொருட்கள் கொண்ட யானை போன்றவை தயாரிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்து தங்கள் செல்போன்களில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அரசுத்துறை சாதனை விளக்க அரங்குகள் மற்றும் தனியார் அரங்குகள் தின்பண்டங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நிகழ்ச்சிகள், நாடக கலைஞர்களின் நாடகம், பட்டிமன்றம் மற்றும் இன்னிசை கச்சேரிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் 57 பயனாளிகளுக்கு 38 லட்சத்து 22,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.