கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது மீனாட்சிபேட்டை ஜே.ஜே.நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(38). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி வனஜா(30), இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். முருகன் கட்டிடம் கட்டும் மேஸ்திரி வேலைக்கு சென்று வருபவர். முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி முருகன் மர்மமான முறையில் அவரது வீட்டின் அருகே இறந்து கிடந்துள்ளார். குடிபோதையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி வனஜா கூறியுள்ளார்.
அதை உண்மை என நம்பிய அவரது உறவினர்கள் முருகனின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு முருகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளனர். மேலும் நன்றாக இருந்த முருகன் திடீரென விஷம் குடித்து இறந்து போனதாக அவரது மனைவி கூறுவது நம்பும்படி இல்லை எனவே முருகனின் மரணத்தை போலீசார் தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்று தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த குறிஞ்சிப்பாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்களது தீவிர விசாரணையில் காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது ஆண் நண்பர் கிருஷ்ணகுமாருடன் சேர்ந்து முருகனை கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் கூறுகையில், “முருகன் தனது சகோதரி மலர்க்கொடி மகள் வனஜாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். கொத்தனார் வேலைக்கு சென்று வந்த முருகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். இதனால் கணவர் மீது வனஜாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முருகனுடன் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத கிருஷ்ணகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காரணம் கிருஷ்ண குமாரும், முருகனுடன் சேர்ந்து கட்டிட வேலைக்கு சென்று வருபவர். இதனால் முருகனை வேலைக்கு அழைத்துச் செல்வதும் மாலையில் அவரை அவரது வீட்டிற்கு கொண்டு வந்து விடுவதும் என அடிக்கடி கிருஷ்ணகுமார் முருகன் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இதனால் வனஜா தனது கணவரின் குடிப்பழக்கம் குறித்து கிருஷ்ணகுமாரிடம் கூறி அவ்வப்போது வருத்தப்பட்டுள்ளார். அதற்கு கிருஷ்ணகுமார் வனஜாவிற்க்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். தொழில் காரணமாக முருகன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த கிருஷ்ணகுமாருக்கும் வனஜா உடன் அன்பாகப் பேசிப் பழகியது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கிருஷ்ணகுமார், வனஜா இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளனர். முருகனும் கிருஷ்ணகுமாரும் சேர்ந்து கட்டிட வேலைக்கு சென்று வருபவர்கள் என்பதால் அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினருக்கு இது குறித்து எந்தவிதமான சந்தேகமும் ஏற்படவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக இவர்களது காதல் தொடர்ந்துள்ளது. முருகனுக்கு போதை அதிகமானதும் அவர் படுத்து நன்றாக தூங்கிய பிறகு அவரது வீட்டிலேயே கிருஷ்ணகுமாரும் வனஜாவும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் வனஜாவிற்கும், கிருஷ்ணகுமாருக்கும் அவர்களின் பேச்சு நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்த முருகன் சந்தேகத்தின் பேரில் இருவரையும் எச்சரித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி மாலை மீனாட்சி பேட்டையில் உள்ள மரவள்ளி தோப்பில் கிருஷ்ணகுமாரும், வனஜாவும் தனிமையில் இருந்ததை நேரடியாக பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். முருகன் அதே இடத்தில் இருவரிடமும் சண்டை போட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே கிருஷ்ணகுமார் தான் வைத்திருந்த துண்டால் முருகனின் கழுத்தில் போட்டு இறுக்கி உள்ளார்.
இதில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போய்விட்டார். இதையடுத்து வனஜாவும், கிருஷ்ணகுமார் இருவரும் போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முருகன் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாட முடிவு செய்து திட்டம் போட்டனர். அதன்படி அன்று நள்ளிரவு அக்கம்பக்கத்தினர் தூங்கிய பிறகு இருவரும் சேர்ந்து முருகனின் உடலை எடுத்து வந்து அவர்கள் வீட்டின் அருகே போட்டு விட்டு மறுநாள் காலை முருகன் குடி போதையில் விஷம் குடித்து இறந்து போனதாக நாடகமாடியுள்ளார் வனஜா. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை கிருஷ்ணகுமார், வனஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.