Skip to main content

“பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Published on 23/01/2025 | Edited on 23/01/2025
Anbumani Ramdoss insists Declare a protected zone 

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் தான் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று (23.01.2025) உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக  நடத்தப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலூர் பகுதி மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு  வரவேற்கத்தக்கது. வேளாண் நிலங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.

அந்த அடிப்படையில் தான் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தூத்துக்குடி பகுதியை சீரழித்த வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ம.க. முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தத் திட்டத்திற்கு தொடக்கத்தில் ஆதரவாக இருந்த திமுக அரசு, மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் நான் அம்பலப்படுத்தினேன். கடந்த திசம்பர் 26ஆம் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்திலும் நான் கலந்து கொண்டேன்.

அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன. இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன. 

Anbumani Ramdoss insists Declare a protected zone 

அரிட்டாப்பட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டிருப்பது சரியான நடவடிக்கை. அதே நேரத்தில் மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியை இனி வரும் காலங்களிலும் இத்தகைய திட்டங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக அந்தப் பகுதியை மேலூர் பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்