நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் முகமது இர்பான், சேலம் மாவட்ட நீதிமன்றத்தில செவ்வாய்க்கிழமை (அக். 1) சரணடைந்தார்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவக்கல்லூரிகளில் முறைகேடாக சேர்ந்ததாக முதன்முதலில் உதித் சூர்யா என்ற மாணவர் மீது புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த மாணவர்களின் மூலச்சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள், நீட் தேர்வு நுழைவுச்சீட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் மேலும் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபோது, முகமது இர்பான் என்ற முதலாம் ஆண்டு மாணவர் மட்டும் சான்றிதழ் சரிப்பார்ப்பு நாளன்று ஆஜராகாமல் இருந்தார். அவருக்கு அடுத்தடுத்து சில நாள்கள் அவகாசம் அளித்தும், சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பில் சென்றார். இதனால், அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. ஆவணங்களை ஆய்வு செய்ததில், மாணவர் முகமது இர்பானும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடியில் முகமது இர்பானின் தந்தை முகமது ஷபிக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் தேனி மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர், இர்பானையும், அவருடைய தந்தையையும் கைது செய்ய விரைந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வசித்தும் வரும் முகமது ஷபியை செப். 29ம் தேதி கைது செய்தனர். ஆனால் இர்பான் தலைமறைவாகிவிட்டார்.
இதற்கிடையே, அவர் மொரீஷியஸ் நாட்டிற்கு தப்பிச் சென்றதாகவும், சேலத்தில் வைத்து இர்பான் கைது செய்யப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் பரவின. என்றாலும் சிபிசிஐடி தரப்போ, அவரை தேடி வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில், முகமது இர்பான், செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், சேலம் மாவட்ட இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார்.
வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சிவா, முகமது இர்பானை வரும் 9ம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இர்பான் சரணடைந்த தகவல் அறிந்து, சேலம் சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு விரைந்து வந்தனர். மாணவனிடம் விசாரிக்க முயன்றனர். ஆனால், இதற்கு இர்பான் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபணை தெரிவித்ததால் சிபிசிஐடி காவல்துறையினர் ஏமாற்றத்துடன் வெளியேறினர். இதனால் நீதிமன்ற அறையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், முகமது இர்பான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.