
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பனிரெண்டுபுத்தூர் கிராமம் மதுரா கிழக்குகொட்டா மேடு பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் சேகர். அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரெட்டி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தனது 2 காளை மாடுகளுடன் நடவுப் பணிக்கு பிரம்பு ஓட்டும்போது நிலத்தில் இருந்த பம்பு செட்டின் பக்கத்தில் இருந்த ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இது தெரியாமல் ஏர் ஓட்டிக்கொண்டுயிருந்த சேகர் அதன் அருகே ஏர் ஓட்டியபோது, மின்சாரம் மாடுகள் மீதும், சேகர் மீதும் பாய்ந்துள்ளது.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்கசிவினால் இரண்டு காளை மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. சேகர், தூக்கி வீசப்பட்டார். இதை நிலத்தில் வேலை செய்துக்கொண்டுயிருந்த சக விவசாயிகளும், விவசாய தொழிலாளிகளும் பார்த்துவிட்டு ஓடிவந்து மின்சாரத்தை நிறுத்திவிட்டு சேகரை தூக்கிவந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆரணி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
இதுப்பற்றிய தகவலறிந்த ஆரணி வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆரணி கிராமிய காவல்நிலைய போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரனை செய்து வருகின்றனர்.

இதேபோல், கடந்த ஆகஸ்ட் 31ந்தேதி இரவு நிலத்தில் இருந்த மாடுகளை வீட்டுக்கு ஓட்டிவர சென்ற வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தை சேர்ந்த கட்டிடம் கட்டும் தொழிலாளி கார்த்திகேயன் மனைவி சுமதி, அவரது 16 வயது மகன் மணிகண்டன் இருவரும், மழையால் அறுந்துவிழுந்துயிருந்த மின்கம்பியை மிதிந்து உயிரிழந்துள்ளனர்.
செப்டம்பர் 1ந்தேதி காலை பக்கத்துக்கு நிலத்தின் உரிமையாளர்கள் பார்த்து தகவல் கூறியபின்பே மக்களுக்கும், உறவினர்களுக்கு விவரம் தெரியவந்து உடலை மீட்டனர். மின்வாரியத்திடம் பல முறை மின்கம்பிகள் தாழ்வாக உள்ளது, அதை சரி செய்யுங்கள் என புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனச்சொல்லி வந்தவாசி - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். போலீஸார் வந்து சமாதானம் செய்தனர்.
மாவட்டத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக கிராமப்புறங்களில் மின் ஓயர்கள் தாழ்வாக செல்கின்றன, மின்கம்பங்கள் உடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளன. இதனை எந்த அதிகாரியும் கண்டுக்கொள்வதில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் காற்று அடிக்கும்போது மின் ஒயர்கள் அறுந்து விழுந்து உயிர் பலியை வாங்குகின்றன.